மூளையின் நினைவாற்றலைச் சிறப்பாகத் தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்புச் சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்தும் கிடைக்கும் 'என் 3' என்ற கொழுப்புச் சத்து நாள்தோறும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் 'சோயா' அவரை எண்ணெய், ஞாயிறுவணங்கி (சூரியகாந்தி) எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
மனித உடலிலே மூளைதான் மிகுதியான உயிர்வளியைப் பயன்படுத்துவது. எனவே, மூளையின் உயிரணுக்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை வலுவின்மை, குழப்பம், நோய்த் தாக்குதல், நினைவிழப்பு நோய், மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க 'பி', 'ஏ', 'ஈ' ஆகிய உயிர்ச்சத்துகள் உள்ள உணவுகளும் தேவை.
மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சீனி உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, வெதுப்பி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன சினம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.
மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் உயிரணுக்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. நினைவாற்றல் உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, நினைவாற்றல் அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.
பிரித்தானிய அறிவியல் அறிஞர்கள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் 'பி' உயிர்ச்சத்துகள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல நினைவாற்றலுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர். ஆனால், அவர்களில் 'பி6', 'பி12' ஆகிய உயிர்ச்சத்துகள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.
இந்த உயிர்ச்சத்துகள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சோறும் கீரையும் இருந்தால் இந்த உயிர்ச்சத்துகள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.
No comments:
Post a Comment