தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள் ..
களப்பிரர் படையெடுப்பால் தமிழகத்தில் தமிழ மூவேந்தர் ஆட்சி குலைந்து சங்க காலம் முடிவுற்ற பின்பு எல்லாத் துறைகளிலும் கோலோச்சிய தமிழ் என்ற நிலை மாறி தமிழ் அரசின் ஆட்சி மொழி, மத வழிபாட்டு மொழி என்று இல்லாமல் போகும் அவலநிலை தோன்றியது. களப்பிரரும், பல்லவரும் தமிழருக்கு அயலான பிராகிருதத்தை அரசவை மொழி ஆக்கினர். தமது அரசாணைகளையும், நிலக் கொடை ஆவணங்களையும் பிராகிருதத்திலேயே வெளியிட்டு மக்கள் மொழியாம் தமிழைப் புறக்கணித்தனர். பல்லவர் பின்பு சமற்கிருதத்தை ஆதரித்தனர். ஆயினும் பல்லவருக்கு அடங்கிய சிற்றரசர்களும் வேளிரும் எளியோரும் தமிழைப் போற்றிப் பாதுகாத்தனர். இதற்கு சான்றாக அமைந்தவை தாம் போரிலும், பூசலிலும் பங்கெடுத்து வீர சாவு எய்திய மறவர்களின் நினைவாக எடுப்பிக்கப்பட்ட நடுகல் கல்வெட்டுகள்.
மதப்பித்து கொண்டு பல்லவ வேந்தர் சமற்கிருதப் பெயர்களை ஏற்றிருந்த வேளையில் அவருக்குக் கட்டுப்பட்டு அடங்கிய சிற்றரசர்கள், வேள்கள், படைத்தலைவர், படைவீரர் உள்ளிட்டு தமிழ எளியோர் பெரும்பலரும் தமிழ் மீது மாறாப் பற்று கொண்டு தமிழ்ப் பெயர்களை ஏந்தி இருந்தனர். ஈண்டு நடுகற்களில் உள்ள தமிழ்ப் பெயர்களைக் குறிப்பாகச் சுட்டவும், அவற்றுள் சில பெயர்கள் அயலக நாகரிக மன்னர் பெயர்களுடன் ஒத்திருப்பதைக் கோடிட்டுக் காட்டுவதுமான எனது பார்வையை வாசகருக்கு இந் நடுகல் கல்வெட்டுச் செய்திகளுடன் தருவதே இந்த நடுகல் கல்வெட்டு விளக்கத்தின் தலையாய நோக்கம்.
இனி, நடுகற்கள் குறித்து சிறு அறிமுக உரைக்குப் பின்பு நடுகல் விளக்கம் தொடங்கும். போரிட்டு மாண்ட மறவர்களுக்கு ஈமக் கடன் ஈந்து அவர் வீரத்தைப் பாராட்டி அவர் நினைவில் கல் ந்ட்டு வழிபடுவது பண்டைய தமிழ் மரபாக இருந்துள்ளது. இவ்வாறு நடப்பட்ட கற்களை நடுகல், வீரகல் என்று தமிழில் அழைப்பர். தெலுங்கில் வீர சிலாலு எனவும் ஆங்கிலத்தில் 'Hero Stones' எனவும் கூறுவர். நடுகற்கள் இந்தியா முழுமையிலும் காணக் கிடைக்கின்றன. தமிழில் தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை உள்ளிட்ட இலக்கியங்களில் இவற்றுக்கான குறிப்புகள் உள்ளன. வெட்சிப் பூ சூடி கள்வர் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். இது நடுகற்களில் தொறுக் (தொழு) கொள்ளல் எனப்படுகின்றது. அதே நேரம் கரந்தைப் பூ சூடி பகைநாட்டுக் கள்வர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை தாயக மறவர் மீட்டு வருவர். இவ்வாறான தொறுப் பூசலில் இருபக்கமும் மறவர்கள் மாள்வர்.
போரில் வீழ்ந்துபட்ட மறவர்களுக்கு நடப்பட்ட நடுகற்கள் அவர்கள் வீழ்ந்த ஊர்களிலேயே நடுப்படுவது உண்டு. ஒரே போரில் இறந்த வீரர்களுக்கு ஒரே இடத்தில் தனித்தனி நடுகற்கள் நடப்படுவதும் உண்டு. இதற்கு ஊரின் ஒரு புறத்தைத் தேர்ந்து ஈமக்காடு போல் எண்ணி அங்கு மாண்ட வீரர்களுக்கு சடங்குகள் ஆற்றி நடுகல் எடுத்து உள்ளனர் என்று கொள்வதற்கும் சான்றுகள் உள்ளன. சில நடுகற்கள் ஏரிக் கரைகளிலும், ஆற்றுக் கரைகளிலும் காணப்படுகின்றன. இன்னும் சில நடுகற்கள் ஊருக்கு வெளியே நடுக் காடுகளில் காணப்படுகின்றன. இது ஆகோள் எனும் தொறுக் கவரப்பட்ட இடம் ஆகலாம். தமிழகத்தில் நடுகற்கள் உள்ள இடங்கள் மக்களால் வேடியப்பன் கோவில் என்று அழைக்கப்படுகின்றன. சில நடுகற்கள் நாய், எருது, கிளி, யானை போன்ற விலங்குகளின் நினைவாகவும் எடுக்கப்பட்டு உள்ளன. கல்வெட்டு ஆய்வாளர் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி நடுகற்களை இருபத்து எட்டு வகையினதாகப் பிரிக்கின்றார்.
சங்க காலத்தில் நடுகற்கள் ஓவியங்களாகவே இருந்துள்ளன. அதற்கு அடுத்து கோட்டு உருவ (Line drawing figures) நடுகற்கள் ஏற்பட்டன. பல்லவர் காலத்தில் தான் புடைப்புச் சிற்பங்கள் கொண்ட வட்டெழுத்து வாசகம் பொறித்த நடுகற்கள் ஏற்பட்டன என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி.
நடுகல்லில் வீரனின் புடைப்புச் சிற்பம் அல்லது உருவம், அவன் சமர்புரியும் நிலை, அவன் கையில் ஏந்திய படைக் கலன் வகை அதன்மேலோ, கீழோ அல்லது பக்கவாட்டிலோ அவன் காலத்தில் வழங்கிய எழுத்துகளில் மன்னனின் ஆட்சி ஆண்டு, அவனுக்குக் கட்டுப்பட்டு அடங்கிய சிற்றரசர் பெயர், அவருடைய படைத்தலைவர் பெயர், அவருடைய மறவர் பெயர், வீர சாவடைந்த மறவன் பெயர், அவனைப் பற்றிய சேதிகள், தொறுப் பூசல் என பல செய்திகள் குறிக்கப்பட்டு இருக்கும்.
தமிழ் நாட்டில் தென்பெண்ணை, சேயாறு, பாலாறு பாயும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை (செங்கம்), விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே 80% நடுகற்கள் கண்டறியப்பட்டு உள்ளன. சேலம், கோவை, மதுரை, திருநெல்வெலி ஆகிய இடங்களிலும் நடுகற்கள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் சோழர் ஆண்ட தஞ்சை, நாகை பகுதிகளில் அதிகமாக நடுகற்கள் கிட்டவில்லை.
இந்நடுகற்கள் பல்லவர், வாணர் (பாணர்), கங்கர், நுளம்பர், சோழர், போசளர், பாண்டியர், விசயநகர மன்னர் ஆகிய அரசர் காலங்களைச் சார்ந்தவை. இவை 4 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து உள்ளன. தமிழி எனும் தமிழ்ப் பிராமியிலும் நடுகற்கள் 2006 ஆம் ஆண்டில் தேனி மாவட்டம் புலிமான்கோம்பையில் மூன்றும், தாதப்பட்டில் ஒன்றுமாக நான்கு நடுகல் வகை சார்ந்த கல்வெட்டுகள் கிட்டி உள்ளன.
வாணர் அல்லது பாணர் பிரிக்கப்படாத வட ஆர்க்காடு, விழுப்புரம் ஒட்டிய தென் ஆர்க்காடு, தருமபுரியின் தகடூர் நாடு, கோலார் ஆகிய பகுதியை ஆண்டுள்ளனர். சங்க காலம் தொட்டே ஆட்சியில் உள்ள இந்த மன்னரின் கீழ் சில குறுநில மன்னர்கள் இருந்துள்ளனர். பல்லவர்க்கு அடங்கிய இவர்கள் கங்கருடனும், நுளம்பருடனும் போரிட்டு உள்ளனர்.
சங்க கால குறுநில மன்னரான கங்கர் கொங்கணர் என்றும் குறிக்கப்படுவர். இவர்கள் காவிரியின் தெற்கே குடகு நாட்டையும் மைசூரின் சில பகுதிகளையும் ஆண்டுள்ளனர். பல்லவர்க்கு அடங்கிய இவர்கள் சில போது பல்லவருடனும், வாணருடன் அதிக அளவும் போர் புரிந்து உள்ளனர்.
பல்லவர் கால நடுகற்கள் பெரும்பாலும் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன. இவை பிராமியில் இருந்து வட்டெழுத்து வளர்ந்து வந்ததன் கால அளவை அறிய உதவுகின்றன. சில தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளன. எளியோர் ஆக்கிய இந்நடுகற்களில் தமிழ் பீடுநடை போடுகின்றது. பிற மொழிச் சொல் கலப்பில்லாமல், சமற்கிருத பெயர்களைத் தமிழ்ப்படுத்தி எழுதி இருப்பது அக்கால மக்களின் தமிழ்ப்பற்றை பறைசாற்றுவதாய் உள்ளது. ஆள் பெயர்கள் 'ஆர்', 'அர்' என்று மதிப்புரவாகவும், உகரச் சாரியை உடனும் குறிக்கப்பட்டு உள்ளன. சில நடுகற்களில் 'மகன்' மக்கள் என்றும், 'மருமகன்' மருமக்கள் என்றும் பன்மையில் சுட்டப்பட்டுள்ளன. இச்செய்கை மக்கள் பொதுவாக வீரர்களை மதித்துப் போற்றியதற்கு அடையாளம் எனலாம். நடுகற்கள் கூறும் வரலாறு எளியோரின் பண்டைய குமுக வரலாறு மட்டும் அன்று, இன்னும் சொல்லப் போனால் அது தமிழின் வரலாறும் கூட என்று கூறுவது மீகை ஆகாது. இத்தகு எளியோர் வரலாற்றை, தமிழ் வரலாற்றை தமிழகத் தொல்லியல் துறை அறிஞர்கள் அரிதின் முயன்று கண்டுபிடித்து, படியெடுத்துப் படித்து விளக்கி நூலாக வெளியிட்டு உள்ளனர். அவர்தம் முயற்சிகள் பாராட்டுக்கு உரியன, உலகத் தமிழரின் நன்றியறிதலுக்கும் உரியன.
இங்கு மேற்கோளாக எடுத்துக் கொள்ளப்பட்ட நடுகல் வாசகங்கள் தமிழகத் தொல்லியல் துறை 1972 ஆம் ஆண்டு வெளியிட்ட 'செங்கம் நடுகற்கள்' எனும் நூலில் இருந்தும், மெய்யப்பன் பதிப்பகம் வெளியீட்டில் கல்வெட்டு அறிஞர் திரு ச. கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'நடுகற்கள்' எனும் நூலில் இருந்தும் பெறப்பட்டவை என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் படிக்க ,
No comments:
Post a Comment